காசிவிஸ்வநாதன் கணேசமூர்த்தி



திதி நிர்ணய வெண்பா

ஆண்டு குரோதியில் ஆனதோர் ஆடியிற்
பூண்டதிதி தேய்பிறை பத்தினில் - வேண்டித்தாம்
கந்தனடி சேர்ந்தார் கணேசமூர்த்தி யன்னார்தம்
பந்தம் அறுத்த படி

வரலாறு

இமிழ்கடல் சூழ்புகழ் ஈழ நாட்டின் 
தமிழுஞ் சைவமும் தழைத்தே ஓங்கும்
யாழ்நகர் கொண்ட துறைமுக நகராய்
வாழ்வகை மக்கள் வாழும் ஊராய்

காங்கேயன் கால்பதி துறையென் பேரைத்
தாங்கிய பெருநகர் காங்கேசன் துறையில்
நற்குடி வந்த நல்லோர் வழியில்
அற்புதம் என்றே இணைந்தார் இருவர்

நாதன் அருளால் நற்றவப் பேறால்
காதல் இணையர் காசிவிஸ்வ நாதர் 
செல்லம்மா தம்பதிகள் செழுமை சேர்ந்த
நல்லறம் இயற்றி நலமே வாழ்கையில்

தங்குடி விளங்கத் தம்வாழ் வினிக்க
பொங்கும் மகிழ்வால் புதுமணஞ் சிறக்க
மக்கள் ஐவரை மனம்போல் பெற்றார்
பக்கத் தவரும் பண்பாற் சிறந்தார்!

மூத்த மகனாய் முழுமுதல் இறைதாம்
காத்த கருவெனக் கணேச மூர்த்தியாய்
முத்தர் பரம்பரையின் முதல்மகன் இவனென
அத்தனை பேரும் அகம்மகிழ்ந் திருந்தார்! 

மாணவப் பருவ மாகிடக் கற்கும்
வேணவா வுந்த விருப்பின் பேரில்
நற்றாய் நடேஸ்வராவை நாடிச் சென்றார்
பெற்றார் மகிழப் பெரும்பே றுற்றார்!  

கல்வி விளையாட்டு கலைகள் யாவும்
வல்லவ ராகி வளர்ந்திடுங் காலை
உயர்தரக் கல்வியில் ஊக்கஞ் செல்ல
அயலில் இருந்த மகாஜனக் கல்லூரியில் 

கணிதந் தன்னைக் களிப்பொடு கற்றே
அணியெனத் திகழ்ந்தார் அவர்வகுப் பதனில்
தந்தை வழியிற் தனயன் தன்னின்
சிந்தை தாமும் சென்றது தாமே! 

எங்கும் எவற்கும் உதவும் இவர்க்கும்
வங்கிப் பணிதாம் வாய்த்த போது
அங்கும் துணிவொடு யார்க்கும் உதவி
மங்காப் புகழொடு மனிதம் காத்தார்! 

திடமொடு வாழும் தீரா விருப்பால்
உடலை அழகாய் உருக்கொள வைத்தார்
காங்கேயன் நகரில் காளைகள் சேர
ஆங்கிவர் தாமும் அரங்கிடை வந்தார்

போட்டி தனிலே புகுந்தே இவரும்
நாட்டினர் வெற்றி நல்லெழி  லாலே
பேணிய உடலாற் பெருமை கொண்டார்
ஆணழக னாகி அகந்தாம் மகிழ்ந்தார்!

வளமொடு வாழ்வின் வளங்கள் காணும்
இளமைப் பருவம் இசைந்த போதில்
அன்பும் பண்பும் அருளும் இல்வாழ்வில்
இன்பொடு இணைய இசைந்தார் தாமே!

முருகன் அருளால் முதுதவ மதனால்
உருபெற் றெழுந்த மாவைப் பதியின் 
சீர்பெறு மரபின் சிந்தைச் சிறப்பால் 
ஊர்தொழ நின்ற உத்தம இணையர்

சின்னத்துரை கமலாதேவி சீரொடு வாழ்ந்த
வன்னங் காட்டும் வாழ்வின் பயனாம்
ஐவரில் முதலாய் ராணி தாமும்
தெய்வ மகளாய்த் தேடி வந்தாள்

இளமை தொட்டே இயல்பிற் தாய்மை
உளமது கொண்ட உத்தமி யான
பச்சங் கொண்ட பாச உறவாம்
மச்சாள் புவன ராணியைத் துணையாய்

ஏற்றே இல்லறம் என்றும் இனிதாய்
ஆற்றிடுங் காலை அவர்தம் சேயாய்
கஜபதி தந்த குலப்பதி யென்றே
கஜபதி பெயரால் அழைத்தனர் நன்றே!

இமையோ ருலகில் இருப்பார் போன்றும்;
தமையன் தனுக்கோர் துணையென் றாங்கும்;
இமையவன் என்னும் இளையான் தன்னொடு
அமைந்த வாழ்வில் அனைவரும் மகிழ்ந்தனர்!

மக்கள் இருவரும் மகிழ்வாய் வாழத்
தக்கது அனைத்தும் தந்தே அவரை
உற்றார் போற்றும் உயர்நிலை தந்தே
பெற்றார் கடனைப் பேறெனக் கொண்டார்

இருமனங் கலந்த திருமண வாழ்வில்
இருவரும் இணைய இசைந்த போதில்
அவரவர் துணையை அவரவர் தேடும்
தவநிலை தம்மைத் தந்தே மகிழ்ந்தார!

உற்றோர்க் குதவும் உயர்குணந் தம்மைப்
பெற்றோர் வழியிற் பெற்றே வளர்ந்த
கன்னல் மொழியாள் கௌசிகா தம்மின்
வன்னங் கண்டே வரித்தான் கஜபதி!

நன்மகள் றிபேக்கா என்னும் பெயராள்  
அன்பில் பண்பில் அயர்வில் உழைப்பில்
என்றும் இளையாள் இளையோன் தேர்வாய்
நன்றே அமைந்தாள் நற்றவப் பேறாய்!

வருமக ளாக வாழ்வில் வந்த
மருமகள் இருவர் மனம்போல் அமையக்
குலமது தழைக்குங் குதூகலம் பொங்க
நலமொடு வாழ்ந்தார் நாளும் போதும்!

பெயர்சொல் பரம்பரை பேணுந் தகைக்காய்
உயர்குணங் கொண்ட டிநேசன் என்பார்
கிடைத்த போதில் கிட்டிய தவமென
அடைந்த மகிழ்வோ அதற்கிணை இல்லை!

மாதவப் பெண்ணாள் மாயா தன்னின்
தோதவ ளென்னுந் தூயவள் சாரா
என்றே பின்னர் இருவர் வரவால்
ஒன்றாய்க் குடும்பம் உயர்ந்த தாங்கே!

கல்வியில் கலையில் கவினுறு வாழ்வில்
வல்லவ ராகி வாண்மைகள் காட்டும்
பேரர்தம் வாழ்வின் பெருமை கண்டே
ஆரத் தழுவி அகந்தாம் மகிழ்ந்தார்!

நம்பிக்கை நாணயம் நற்பண் பதனால்
தம்பக்கம் யாவரையும் ஈர்த்திடும் இயல்பும்
நேரிய பேச்சும் நிமிர்ந்த நடையும்
கூரிய மதியும் கொண்ட ததனால்

அன்பொடு சுற்றம் அரவணைத் திருக்க
இன்ப வாழ்வில் இருந்தார் நன்றே!
இறைப்பணி செய்தும் இல்லார்க் குதவியும் 
நிறைவாய் வாழ்ந்தே நிம்மதி கொண்டார்!


அன்புமனையாளின்
அகம் நிறைத்த நினைவுகள் .. ..



நாற்பது ஆண்டுகள் நாம்கொண்ட பந்தத்தின்
பாற்படு பரம்பரை பதைபதைத்து நிற்க .. ..
ஆற்றுவார் இன்றி அகமுடைந்து நிற்கின்றேன்

பச்சமுள்ள மச்சானே பக்கத் துணையிருக்க
மிச்சமுள்ள வாழ்வையும் மகிழ்வொடு களித்திடவே
அச்சமின்றி இருந்தேன் அதுதாம் பொய்யானதோ?

கொடுத்து வைத்தவன் நானென்பதால் உனக்குமுன்
எடுத்து விடுவான் என்னை முருகன் - என
அடிக்கடி சொல்வீரே, அதுதாம் நிஜமானதோ?

உந்தன் மீது வைத்த அன்பாற்றான்
கந்தனவன் தனக்குகந்த கார்த்திகை நாளில்
வந்துமை அழைத்துச் சென்றானோ?

நேரத்துக்கு எதையும் நேர்த்தியாய்ச் செய்தவும்
தீரத்தையும் இன்று தேர்ந்துதான் செய்தீரோ?
வேரறுந்த நிலையில் விம்முகிறேன் நான் .. ..

அன்பு மனைவி
புவனராணி 

எந்தையே எங்கேகினீர் - எம்
சிந்தை கலங்கிடவே .. ..




நாம் சிறுவயதில் விளையாட ஏதாவது கேட்கின்
அனைத்தையும் அக்கணமே வாங்கித் தருவீர்கள்

அண்ணனுக்கு வாங்கிக் கொடுத்தது எதுவோ அதுபோல்
தம்பிக்கும் வாங்கிக் கொடுப்பீர்கள்
நாம் இருவரும் காதல் வசப்பட்ட போது
ஆதரவாய் இருந்து மணமுடித்து வைத்தீர்கள்

உள்ளதை உள்ளபடி பேசு
நல்லதைச் செய் நன்மை விளையும் எனச்
சீரிய சிந்தனைகளை நெஞ்சில் விதைத்து எம்மை
நேரிய வாழ்வின்வழி செலுத்தினீர்கள்

உழைப்புக்கு உகந்த ஊதியத்தை – அவர்
வியர்வை காயுமுன்பே கொடுக்கப் பணிப்பீர்கள்
அனைவரையும் ஒன்றாய் அன்போடு அரணைக்க
எமக்கெலாம் கற்றுத் தந்தீர்கள்

இன்னும் இன்னும் நாம் கற்றிட
எண்ணுகிறோம் தந்தையே - எமை
வழிப்படுத்திட மீண்டும் வர மாட்டீரோ .. .. ?

அன்புப் புதல்வர்கள்
கஜபதி, இமையவன்


குஞ்சு குஞ்சென்று என்னைக் கொஞ்சி மகிழும் தாத்தாவே .. ..




சிறுவயது முதல் என்னில் அன்பு வைத்து
என் தேவைகள் எது என்றாலும்
நான் கேட்காமலே பூர்த்தி செய்து
என்னை ஆனந்தப்படுத்துவீர்களே தாத்தா ..

ஆசிரியர் சொல்லித்தராத பல முறைகளில்
கணக்குகளை விளக்கி
விடைசொல்லி வழிகாட்டுவீர்கள்

தமிழுக்கென்றே வாழ்ந்த பெரும் புலவர் பரம்பரையில்
வந்த என்னைக் கணிதத்துறைக்குத் திருப்பிப்
பல வெற்றிகள் பெற வைத்தவர் நீங்கள் தானே

எனது ஒவ்வொரு வெற்றியின் போதும்
உடனிருந்து அவைபற்றிக் கேட்டு மகிழ்வீர்களே
இனி யாரிடம் நான் சொல்வது?

வங்கித் தொழிலில் பலரதும்
பாராட்டுகளைப் பெற்ற கதை,
போர் நடந்த காலத்தில் உந்துருளியில்
வெள்ளைக்கொடி கட்டி
வங்கி சென்றுவந்த கதை,
இளவயதில் காங்கேசன்துறை நகரில்
ஆணழகனாய்க் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நடந்த கதை எனப்
பல கதைகளைப் பக்குவமாகக் கூறி
வாழ்வில் வெற்றிபெற என்னை ஊக்குவித்தீர்களே தாத்தா
இனி நான் யாருடன் கதை பேசுவேன்?
யாரிடம் கதை கேட்பேன்?

நான் பள்ளி விட்டு வரும்வரை
வீதியில் காத்து நிற்பீர்கள்
களைப்பைக் காட்டாமல் இன்முகத்தடனே
வீட்டுக்கு அழைத்துச் செல்வீர்கள் .. ..
நான் சாப்பிடும் வரை
நீங்கள் சாப்பிடாமல் காத்திருப்பீர்களே .. ..

சாரணராய் அப்பா சாதித்தமை போன்று
யார்க்கும் உதவும் நற்பண்போடு
நானும் வளர வழிகாட்டினீர்கள் .. ..
இனியும் அதுபோல் வானத்தில் இருந்து
வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கண்டு!

அன்புப் பேரன்
டிநேசன்


அன்புள்ள அண்ணாவிற்கு..!!

அண்ணா என்றும் உங்கள் அழைப்பு சின்னத்தம்பி என்று சொல்வது எனது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

எனது சிறு பிராயத்தில் இருந்தே எனது குற்றம், குறைகளை சுட்டிக்காட்டி நல்வழி காட்டியாக இந்தீர்கள். கோபம் முன் வந்தாலும் சிறு நேரத்தில் அதை மறந்து அன்பாகப் பழகுவீர். அண்ணா எங்கள் திருமணத்தையும் முன் நின்று நடத்தினீர்கள்.

இறுதிக் காலத்தில் உடல்ரீதியாக நலிவுற்று இருந்த போதும் உங்கள் புன்னகை மாறவில்லை. இறுதியாக எனது கரங்களைப் பிடித்து தலையசைத்து அனுப்பியது இன்றும் என் கண்முன்னே நிற்கிறது. நானும் செல்வராணியும் இறுதியாக பார்க்கும் போது புன்முறுவலுடன் இருந்தீர்கள். மறக்க முடியாது அண்ணா.

உங்கள் ஆத்மா சாந்தியடை இறைவனைப்பிரத்திப்போம்.


பிரிவால் துயருறும்

அன்புத்தம்பி மற்றும் செல்வராணி


In Loving Memory of Periyamachchan

I called him Periyamachchan. The first thing which comes to my mind is him making his own fish tanks in different sizes. Had tropical and cold water fish in them. My brother and I loved to feed the fish when we came on holiday from Colombo to Jaffna. We would help him clean the tanks. He loved us helping him. He taught us how to siphon water out of the tanks which was lot of fun for us.



He also liked bodybuilding and we used to be facinated watching him working out with dumbbells. He was quite naughty and stubborn when he was a teenager. If anyone scolded him for being naughty he would climb up the mango tree and would refuse to come down even if it got dark and was quite late at night. Maami (his mother) would stand under the tree begging him to come down. We all would have our dinner and go to bed, leaving him up the tree and in the morning we would find him in the kitchen having his breakfast. No one talked about it and the whole incident would be forgotten. He was a very kind and a good hearted person. I know for sure my late mother had a soft spot for him in her heart. You can easily say that he was her favourite nephew for sure. We were quite shocked when we heard the sad news of his death. I will surely miss him and will carry the treasured memories with me forever. 

May his soul rest in peace.

Loving cousin Jothy


உதயன் பத்திரிகை 31-07-2024

வலம்புலரி பத்திரிகை 31-07-2024

வலம்புலரி பத்திரிகை 31-07-2024










புகைப்படங்கள்


நன்றி நவில்கின்றோம்

'எந்நன்றி கொன்றார்க்கம் உய்வுண்டாம் உய்வில்லை
செநன்றி கொன்ற மகற்கு"

எமது குடும்பத்தின் குலவிளக்காய் திகழ்ந்த 
அமரர் காசிவிஸ்வநாதன் கணேசமூர்த்தி

திடீர் மரணச் செய்தி கேட்டு எமது துக்கத்தில் பங்கு கொண்டு இறுதிக்கிரியை நிகழ்வுகளில் நேரடியாகவும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளம் மூலமும் ஆறுதல் மொழி பகிர்ந்தோர்க்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் மற்றும் பதாகைகள் வெளியிட்டோர்க்கும் எமது மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்வதுடன் எமது இல்லத்தில் நடைபெற்ற அந்தியேட்டி கிரியை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிராத்தித்த அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக இதயபூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றி
அன்னாரின்
குடும்பத்தினர்




0 comments:

Post a Comment