கனிமொழியே தனிமொழியே
கவின்மொழியே வாழ்க
கற்பனையே அற்புதமே
பொற்புருவே வாழ்க
பனிமலரே எனதுயிரே
நனிசுவையே வாழ்க
பானிலவே வானமுதே
தேனனையாய் வாழ்க.
இயலென்றே நீவளர்ந்தாய்
இவ்வுலகோர் மகிழ்ந்தார்
இசையென்றே நீ செழித்தாய்
இவ்வுலகோர் நெகிழ்ந்தார்
நயமெல்லாம் மிகக்கொண்ட
நாடகமாய் எழுந்தாய்
நாட்டினரும் உலகினரும்
நாடிநிதம் உயர்ந்தார்.
அகப்பொருளாய் புறப்பொருளாய்
அரும்பொருளாய் வாழ்க
அகத்தியனால் காப்பியனால்
வளர்ந்தனை நீ வாழ்க
மிகப்பலவாய் இகப்புகழாய்
விளங்கிடுவாய் வாழ்க
மென்மொழியே செந்தமிழே
என்னுயிரே வாழ்க
பாட்டாக முன்நடந்தாய்
உலகநிலை கண்டாய்
பாரின்லே உரை நடையாம்
புதுநடையும் கொண்டாய்
காட்டாறு போல்நீயோ
காலமெல்லாம் விரைந்தாய்
கட்டழுகு குன்றாத
மேனியினாய் வாழ்க
கவிதை எனப் புலவோர்கள்
உனைவியந்தே நிற்பார்
கதையென்றும் நாவலென்றும்
பலர்கூடி நயப்பார்
புவிபோற்றும் புகழ்படைத்தாய்
பூங்கொடியே மதுமொழியே
பழமொழியே வாழ்க
நன்றி புலவர் மா.பார்வதிநாதசிவம்
0 comments:
Post a Comment